2-வது டெஸ்ட்: வங்காளதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இலங்கை


2-வது டெஸ்ட்: வங்காளதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இலங்கை
x

image courtesy:ICC

தினத்தந்தி 28 Jun 2025 10:52 AM IST (Updated: 29 Jun 2025 9:55 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்தது.

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 247 ரன்னில் அடங்கியது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 458 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பதும் நிசாங்கா 158 ரன்களும், குசல் மென்டிஸ் 84 ரன்களும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 115 ரன்கள் அடித்திருந்தது.

இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணி மேற்கொண்டு 18 ரன்கள் அடித்த நிலையில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றி அசத்தியது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பதும் நிசங்கா கைப்பற்றினார்.

1 More update

Next Story