3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்கு

3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடந்து வருகிறது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர்.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய கெய்ல், இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமதுவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். இவின் லீவிசும் இந்திய பந்து வீச்சை பதம் பார்க்க தவறவில்லை. இதனால் முதல் 10 ஓவர்களில் அந்த அணியின் ஸ்கோர் 114 ரன்களாக எகிறியது. 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த அதிகபட்சம் இது தான். கெய்ல் தனது 54வது அரைசதத்தை கடந்தார்.

ஸ்கோர் 115 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் இவின் லீவிஸ் (43 ரன், 29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் கிறிஸ் கெய்ல் (72 ரன், 41 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) கலீல் அகமதுவின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் சிக்கினார். இதன் பிறகு அவர்களின் ரன்வேகம் குறைந்தது. 22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது ஷாய் ஹோப் 19 ரன்களுடனும், ஹெட்மயர் 18 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். தொடர்மழை காரணமாக அடுத்து தொடங்கிய ஆட்டம் 35 ஒவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்பின் களமிறங்கிய ஹெட்மயர் 25(32) ரன்களும், ஷாய் ஹோப் 24(52) ரன்களும், அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன் 30(16) ரன்களும், ஜாசன் ஹொல்டர் 14(20) ரன்களும், பிராத்வெய்ட் 16(14) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாபியன் ஆலென் 6(7) ரன்னும், கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இந்தியா அணியின் சார்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com