இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி திணறல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், 4 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி திணறல்
Published on

லீட்ஸ்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

முதல் ஓவரின் ஐந்தாவது பந்தைச் சந்தித்த கே.எல்.ராகுல் அதை டிரைவ் செய்ய முற்பட்டு அது சரியாகப் படாமல் பேட்டை உரசிவிட்டு விக்கெட் கீப்பர் பட்லரிடம் தஞ்சம் புகுந்தது. கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் இம்முறை டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் ஐந்தாவது ஓவரில் ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவரையும் 7 ரன்களில் வீழ்த்தினார் ஆண்டர்சன். 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னர் ரோகித் சர்மாவும் ரஹானேவும் சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தியநிலையில், 54 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்த ரஹானே முதல் பகுதியின் கடைசி ஓவரில் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 25.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 75 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com