3வது டெஸ்ட் போட்டி: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 249/5

3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
3வது டெஸ்ட் போட்டி: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 249/5
Published on

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மா, நவ்தீப் சைனி இடம் பிடித்தனர்.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

எனினும், வார்னர் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். ஆஸ்திரேலியா 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதுடன் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

அணியின் ஸ்கோர் 106 ரன்களாக உயர்ந்த போது, புகோவ்ஸ்கி 62 ரன்களில் (110 பந்து, 4 பவுண்டரி) நவ்தீப் சைனியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன்பின்னர் ஸ்மித் இறங்கினார். அணிக்கு லபுஸ்சேன் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் கைகொடுத்தது.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. லபுஸ்சேன் 67 ரன்களுடனும் (149 பந்து, 8 பவுண்டரி), சுமித் 31 ரன்களுடனும் (64 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இதன்பின்பு இன்று 2வது ஆட்டம் தொடங்கியது. இதில், லபுஸ்சேன் 91 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்து வீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து சதம் எடுக்க தவறினார்.

இதற்கு அடுத்து விளையாடிய வேட் 13 ரன்களும், கிரீன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 84.5 ஓவர்கள் வீசப்பட்டபொழுது 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 249 ரன்களை எடுத்திருந்தது. ஸ்மித் 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனையடுத்து உணவு இடைவேளை விடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com