3-வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய ஏ அணி

3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
Image Courtesy: Instagram ruutu.131
Image Courtesy: Instagram ruutu.131
Published on

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி, பிரியங் பஞ்சல் தலைமயிலான இந்திய ஏ அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த சூழலில் 3-வது டெஸ்ட் பெங்களூருவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்-யின் சதத்தால் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு அளித்த உபேந்திரா யாதவ் 76 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து ஏ அணியில் மேத்யூ பிஷர் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி தங்கள் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரக்கள் ஜோ கார்டர் 8 ரன்களிலும் ரசின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து ஏ அணி பின்னர் மார்க் சாப்மேன் மற்றும் சீன் சோலியாவின் அபார ஆட்டத்தால் மீண்டு எழுந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க் சாப்மேன் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். சீன் சோலியா 54 ரன்களில் நடையை கட்டினார்.

இறுதியில் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சவுரப் குமார் 4 விக்கெட்களையும், ராகுல் சஹால் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

56 ரன்கள் முன்னிலை உடன் 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரஜத் படித்தார்-ருதுராஜ் ஜோடி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரஜத் படித்தார் சதம் அடித்து அசத்தினார். ருதுராஜ் 94 ரன்களில் வால்கெர் பந்துவீச்சில் சாப்மேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய ஏ அணி தங்கள் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 416 ரன்கள் எடுத்தால் வெற்றி இமாலய இலக்குடன் நியூசிலாந்து ஏ அணி களமிறங்கியது. அந்த அணி மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களம் இறங்கியது.

இதில் தொடக்க வீரர் ஜோ கார்டர் சதம விளாச, கிலிவர் மற்றும் சாப்மான் முறையே 44 ரன்கள் மற்றும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் நியூசிலாந்து அணி 302 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சவுரப் குமார் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com