3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா


3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா
x

image courtesy:twitter/BCCI

முதல் இன்னிங்சில் இந்திய அணி இன்னும் 50-க்கும் குறைவான ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் - ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பாக ஆடியது. இங்கிலாந்து பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட இந்த ஜோடி விரைவில் விக்கெட்டுகளை இழக்க கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியது. இதனால் ரன் வேகம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் அவுட்டானார்.

இதனையடுத்து ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா - நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இவர்களும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோர்வடைய செய்தனர். நிறைய டாட் பந்துகளை எதிர்கொண்ட இவர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்தனர். ஜடேஜா ஒரளவு ரன்கள் அடிக்க மறுமுனையில் நிதிஷ் ரெட்டி நிறைய பால்களை வீணடித்தார். இவர்களில் 91 பந்துகளை எதிர்கொண்ட நிதிஷ் ரெட்டி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தார். வாஷிங்டன் சுந்தரும் தடுப்பாட்டத்திலேயே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 103 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 52 ரன்களுடனும் (102 பந்துகள்), வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுடனும் (27 பந்துகள்) களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 47 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது.

1 More update

Next Story