3வது டெஸ்ட் போட்டி: மழையால் ஆட்டம் பாதிப்பு; ஆஸ்திரேலியா 21/1 (7.1 ஓவர்கள்)

3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
3வது டெஸ்ட் போட்டி: மழையால் ஆட்டம் பாதிப்பு; ஆஸ்திரேலியா 21/1 (7.1 ஓவர்கள்)
Published on

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதன்படி, இந்திய அணி பந்து வீசுகிறது.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் வார்னர் மற்றும் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி காயத்தில் இருந்து மீண்டு 14 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டி இருந்ததால் முதல் இரு டெஸ்ட் போட்டிகளை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா இந்த தொடரில் முதல் முறையாக விளையாட உள்ளார். பார்ம் இன்றி தவிக்கும் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடம் பிடித்துள்ளார். தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், பும்ரா.

ஆஸ்திரேலியா: வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் அல்லது டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 5 ரன்கள் எடுத்திருந்தபொழுது, சிராஜ் பந்து வீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி 14 ரன்களுடனும், லபுஸ்சேன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி 7.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிப்படைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com