டெஸ்டில் 400 ரன்கள்.. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே...- முல்டரை விமர்சித்த கிறிஸ் கெயில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த பிரையன் லாராவின் (400 ரன்கள்) சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைத்தது.
கேப்டவுன்,
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனும், ஆல்- ரவுண்டருமான வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் 367 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதனால் அவர் மீண்டும் களமிறங்கி 400 ரன்களை தொடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவரான வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் (400 ரன்கள்) உலக சாதனையை உடைக்க அருமையான வாய்ப்பு கனிந்த போதிலும், அதற்குள் டிக்ளேர் செய்து ஆச்சரியப்படுத்தினார்.
இது குறித்து வியான் முல்டர் விளக்கமும் அளித்திருந்தார். அதில், 'அணியின் நலன் கருதியே டிக்ளேர் செய்தோம். 2-வதாக, பிரையன் லாரா உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் குவித்தார். அந்த சிறப்பு வாய்ந்த சாதனை அவரிடம் தொடர்ந்து இருக்கட்டும். மீண்டும் ஒரு முறை இதே போன்று வாய்ப்பு கிடைத்தாலும் அனேகமாக இதைத்தான் செய்வேன்' என்று கூறினார்.
இந்நிலையில் முல்டரின் முடிவை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "எனக்கு 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், கண்டிப்பாக அதை செய்திருப்பேன். ஏனெனில் இது அடிக்கடி நிகழக்கூடியது அல்ல. நீங்கள் மீண்டும் எப்போது முச்சதம் அடிப்பீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. இது போன்ற வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இந்த சாதனை லாராவிடம் தொடர்ந்து இருக்கட்டும் என்று முல்டர் நினைத்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஒரு வேளை 400 ரன்களை குவிக்க முடியுமா? என அவர் அச்சமடைந்திருக்கலாம். அந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் குழம்பி விட்டார். டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் குவிக்கும் வாய்ப்பு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும். அந்த அரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட்டீர்கள்" என்று கூறினார்.






