41, 44, 46 வயது... அப்ரிடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எவ்வளவு குழப்பம்?

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் பிறந்த நாளான இன்று வாழ்த்து தெரிவித்த தனது ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
41, 44, 46 வயது... அப்ரிடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எவ்வளவு குழப்பம்?
Published on

புதுடெல்லி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. கடந்த 2010ம் ஆண்டு டெஸ்டில் இருந்தும், கடந்த 2015ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதன்பின் கடந்த 2017ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்துள்ளனர். இதற்கு அப்ரிடி டுவிட்டர் வழியே தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

அதனுடன் நில்லாமல், அவரது வயது பற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு குழப்பம் உண்டாக்கியுள்ளது. அந்த பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். இன்று எனக்கு 44 வயது! என்னுடைய குடும்பம் மற்றும் ரசிகர்களே எனது மிக பெரிய சொத்து என்று தெரிவித்து உள்ளார்.

இதில் என்ன குழப்பம்... என்கிறீர்களா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில், கடந்த 1980ம் ஆண்டு மார்ச் 1ந்தேதி அப்ரிடி பிறந்துள்ளார் என தெரிவித்து உள்ளது. அதன்படி அவரது வயது 41.

கடந்த 2019ம் ஆண்டு அப்ரிடி கூறும்பொழுது, அறிமுக போட்டியை கடந்த 1998ம் ஆண்டில் விளையாடும்பொழுது எனக்கு வயது 16 அல்ல. 19 வயது என கூறினார். ஆனால், இலங்கைக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது 16வது வயதில் அப்ரிடி விரைவாக சதம் அடித்துள்ளார் என சாதனை புத்தகத்தில் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தனது கேம் சேஞ்சர் என்ற சுயசரிதை புத்தகத்தில் அப்ரிடி, அவர்கள் கூறுவதுபோல் சதம் அடித்தது 16 வயதில் அல்ல. 19 வயதில். நான் கடந்த 1975ம் ஆண்டு பிறந்தேன். எனது வயது அதிகாரிகளால் தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது என அப்ரிடி தெரிவித்து உள்ளார்.

அப்ரிடியின் கூற்றுப்படி அவர் பிறந்தது 1975ம் ஆண்டு எனில், அவருக்கு வயது 46. அதனால் தனக்கு 44 வயது என அவர் கூறுவது கூடுதல் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com