4-வது டி20: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
4-வது டி20: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
Published on

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா, சென்னையில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே இருவரும் தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாகிப் மக்மூத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணைந்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பென் டக்கெட் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பில் சால்ட் 23 ரன்களிலும், கேப்டன் பட்லர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனிடையே இந்திய அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரில் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதில் அதிர்ச்சிக்குள்ளான ஷிவம் துபேவுக்கு மாற்றுவீரராக (concussion sub) ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். இதனால் இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றார். இவரது பந்துவீச்சில் லிவிங்ஸ்டன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 25 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 51 ரன்களில் வருண் சக்ரவர்த்தியின் சூழலில் சிக்கினார். அதே ஓவரில் பிரைடன் கார்சின் விக்கெட்டையும் வருண் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 51 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ரவி பிஸ்னோய் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com