இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: அன்ஷுல் கம்போஜ் அறிமுகம் ஆக வாய்ப்பு..?

image courtesy:PTI
வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என கூறப்படுகிறது.
மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணியின் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்ர்தீப் சிங் காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். மறுபுறம் மற்றொரு பவுலரான ஆகாஷ் தீப் காயத்தில் சிக்கியுள்ளார். ஆகாஷ் தீப் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் 4-வது போட்டிக்கு முன்னதாக முழுவதும் குணமடைய முடியுமா என்பது தெரியவில்லை. இன்னும் அவர் பயிற்சியை தொடங்கவில்லை.
எனவே இந்திய தேர்வுக்குழு அறிமுக வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜை அணியில் சேர்த்துள்ளது. தற்போது கம்போஜ் இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய பயிற்சியின்போது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவரது செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்ததாக கூறப்படுகிறது. எனவே பும்ரா,சிராஜ் ஆகியோருடன் 3-வது வேகப்பந்து வீச்சாளராக அன்ஷுல் கம்போஜ் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






