

லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் முதல் இன்னிங்சை தொடங்கினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் (5 ரன்), ஹசீப் ஹமீத் (0) இருவரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து 3 சதம் அடித்த கேப்டன் ஜோ ரூட் 21 ரன்களில் (25 பந்து, 4பவுண்டரி) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்தநிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஓவர் டான் 1 ரன்னில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய மலான் 31 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஆலிபோப், ஜானி பேர்ஸ்டோ ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜானி பேர்ஸ்டோ 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி, ஆலிபோப்புடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 ரன்கள் எடுத்த மொயீன் அலி, ஜடேஜா பந்து வீச்சில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலீபோப் 81 ரன்கள் குவித்து ஷர்தூல் தாகூர் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கிறிஸ் வோக்ஸ் 60 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்கள் குவித்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து உள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.