4-வது டெஸ்ட்: நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் வேண்டாம்.. அந்த 2 வீரர்களை சேருங்கள் - இந்திய முன்னாள் வீரர் யோசனை

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டுமென முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் யோசனை தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- " நான் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவை தேர்ந்தெடுப்பேன். நல்ல இடது கை பவுலரான அர்ஷ்தீப் பந்தை காற்றில் நகர்த்தி அசத்தக்கூடியவர். அது இங்கிலாந்து சூழ்நிலைகளில் முக்கியமானது. அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வார் என்பதும் முக்கியமானது. அவருடைய பந்து வீச்சை நான் பார்த்துள்ளேன். அவருக்காக நான் நிதிஷ் ரெட்டியை அணியிலிருந்து நீக்குவேன். சிராஜ், பும்ரா ஆகியோர் தொடர்ந்து விளையாட வேண்டும். குல்தீப் அணிக்குள் வர வாஷிங்டன் சுந்தர் வழி விட வேண்டும். ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல உங்களுக்கு 5 பவுலர்கள் தேவை. பகுதி நேர பந்து வீச்சாளர்களைக் கொண்டு நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாது" என்று கூறினார்.






