இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: 4வது நாளில் மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று உணவு இடைவேளை வரை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: 4வது நாளில் மழையால் ஆட்டம் பாதிப்பு
Published on

சிட்னி,

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த 3ந்தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர்.

இதில், ராகுல் 9 (6 பந்துகள்), மயங்க் அகர்வால் 77 ரன்கள் (112 பந்துகள்) அடித்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து நடந்த 2வது நாள் ஆட்டத்தில், உணவு இடைவேளை வரை இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா இரட்டை சதம் பூர்த்தி செய்வார் என எதிர்பார்த்த நிலையில் 193 ரன்கள் (373 பந்துகள் 22 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இந்திய அணி தேநீர் இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் ஜடேஜா (81), விஹாரி (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வீரர் பன்ட் 159 (189 பந்துகள், 15 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து உள்ளார். அவர் ஆட்டமிழக்கவில்லை. 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் ஹாரிஸ் (79), கவாஜா (27), லபூஸ்சாக்னே (38), மார்ஷ் (8) மற்றும் ஹெட் (20) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி தேநீர் இடைவேளை வரை 68 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் விளையாடி வந்தனர்.

இந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிப்படைந்தது. 83.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 (91 பந்துகள் 3 பவுண்டரிகள்), கம்மின்ஸ் 25 (41 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து இன்று 4வது நாள் ஆட்டம் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. சற்றுமுன் உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. முதல் இன்னிங்சில் அந்த அணி 386 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com