4-வது டெஸ்ட்: கருண் நாயர் நீக்கப்படுவாரா..? இந்திய துணை பயிற்சியாளர் பதில்

image courtesy:PTI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பெற்ற கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டு சாய் சுதர்சன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய துணை பயிற்சியாளரான ரியான் டென் டோஸ்கேட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தொடரில் 2 - 1 என பின்னிலையில் இருக்கும்போது இது போன்ற கேள்விகள் வரும். ஆனால் தொடரின் பெரும்பகுதிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக நாங்கள் உணர்கிறோம். மிகக் குறுகிய இடைவெளியில் நிறைய விக்கெட்டுகள் இழந்ததே 2 தோல்விகளுக்கும் காரணம். 40 ரன்களுக்கு நாங்கள் 6 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் என்று கருதுகிறோம்.
கருண் நாயர் கூட நல்ல ரிதத்தில் பேட்டிங் செய்கிறார். அவரது பார்ம் நன்றாக இருப்பதாகவும் நாங்கள் உணர்கிறோம். ஆனால் அவரிடமிருந்து அதிக ரன்களை நாங்கள் விரும்புகிறோம். தற்சமயத்தில் நன்றாக செய்ததில் கவனம் செலுத்தி வெற்றிக்குத் தேவையான சிறிய விஷயங்களை ஒழுங்கமைப்போம்" என்று கூறினார்.






