தொடர்ந்து 5-வது தோல்வி: சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியது என்ன..?

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை படுதோல்வி அடைந்தது.
image courtesy:twitter/@ChennaiIPL
image courtesy:twitter/@ChennaiIPL
Published on

சென்னை, 

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 104 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுனில் நரைன் 44 ரன்கள் அடித்தார்.

தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்த சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதனால் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் அந்த அணியை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படி தொடர் தோல்விகள் சந்தித்து வருவது குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி அளித்த பேட்டியில்,

"தொடர்ச்சியான தோல்விகள் நிச்சயமாக எங்களை ரொம்பவே காயப்படுத்தியுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவரது மனங்களும் புண்பட்டிருக்கும். இருப்பினும் பிளே ஆப் வாய்ப்பு முடிந்துவிட்டது என நாங்கள் வெள்ளைக் கொடியைக் காட்டி விடவில்லை. நாங்கள் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்பது உறுதி.

ஐபிஎல் ஒரு பெரிய, நீண்ட தொடர். இது உத்வேகத்தைப் பற்றியது. இப்போது அந்த உத்வேகம் எங்களிடம் இல்லை. நாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. நாங்கள் நிச்சயமாக அதை ஒப்புக்கொள்கிறோம். எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதை எட்டி பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதை எங்களால் செய்ய முடியும்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com