இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 198/7

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. #INDVsENG
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 198/7
Published on

லண்டன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்டுகளில் 3-ல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கியது. இதில் ஜென்னிங்ஸ் 23 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இந்த தொடரோடு ஓய்வு பெற உள்ள குக், தனது 37வது ரன்னில் கொடுத்த கேட்ச்-ஐ ரகானே பிடிக்க தவறியதால் அரை சதம் அடித்து அசத்தினார்.

பின்னர் அலஸ்டர் குக் தனது 71வது ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரூட் (0), பரிஸ்டோ (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மொயின் அலி (50) தனது அரை சதத்தினை பதிவு செய்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குர்ரன் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களும், அடில் ரஷித் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com