5-வது டெஸ்ட்: இந்திய அணியில் அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவார் - ஸ்டெயின் கணிப்பு

பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் 4 மாற்றங்களாக ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு பதிலாக கருண் நாயர், துருவ் ஜூரெல், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் அடித்துள்ளது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் 2 ரன்களிலும், கே.எல்.ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டெயின், "5-வது டெஸ்டில் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார்" என்று பதிவிட்டுள்ளார்.






