சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்..!! ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முகமது சிராஜ் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்..!! ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!
Published on

புது டெல்லி,

6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் தொடரின் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் இலங்கை வீரர்கள் நிசாங்கா சமரவிக்ரமா, சாரித் அசலங்கா , தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் அவர் விடவில்லை. கேப்டன் தசுன் ஷனகா, குசல் மென்டிஸ் ஆகியோரும் அவரது பந்து வீச்சுக்கு இரையானார்கள். 

இந்த போட்டியில் முகமது சிராஜ் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். முன்னதாக சிராஜ் தனது 16-வது பந்தில் 5-வது விக்கெட்டை எடுத்து அதிவேகமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளர் பட்டியலில் இணைந்தார். 

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்,  'நம் எதிரிகளுக்காக என் இதயம் அழுவதை நான் இதுவரை உணர்ந்ததில்லை என்று நான் நினைக்கவில்லை ... அது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது போல் இருக்கிறது ... நீங்கள் ஒரு மார்வெல் அவெஞ்சர் முகமது சிராஜ்... 'என பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு, ரசிகர் ஒருவர் சார், நீங்கள் முகமது சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுங்கள் என்று  கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா ஏற்கனவே அதைச் செய்துள்ளேன் என்று பதிலளித்தார். அவரது இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாகவே 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, முகமது சிராஜ்-க்கு மஹிந்திரா 'தார்' எஸ்யுவி காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com