சென்னைக்கு எதிராக அதிரடி சதம்... பிரியன்ஷ் ஆர்யா படைத்த சாதனைகள்

Image Courtesy: @IPL / @PunjabKingsIPL
சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பின் பிரியன்ஷ் ஆர்யா சதம் விளாசினார்.
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் விளாசிய பிரியன்ஷ் ஆர்யா சில சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு,
* 24 வயதான பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதம் விளாசினார். ஐ.பி.எல். தொடரில் ஒரு வீரரின் 4-வது அதிவேக சதம் இதுவாகும். இந்த வகையில் முதல் 3 இடங்களில் பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெய்ல் (30 பந்து), ராஜஸ்தான் அணிக்காக யூசுப் பதான் (37 பந்து), பஞ்சாப் அணிக்காக டேவிட் மில்லர் (38 பந்து) ஆகியோர் உள்ளனர்.
* முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆவதற்கு முன்பே ஐ.பி.எல் தொடரில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பை பிரியன்ஷ் ஆர்யா பெற்றார். இதற்கு முன்பு பால் வல்தாட்டி (2011-ம் ஆண்டு இதே பஞ்சாப் அணிக்காக சதம்) சதம் விளாசி இருந்தார்.
* சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு வீரர் ஐ.பி.எல்.-ல் சதம் காண்பது இது 8-வது நிகழ்வாகும்.






