அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் - கெய்க்வாட்

நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக்குடன் வெளியேறியது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4-வது அணியை தீர்மானிக்கும் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸ்சிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், " இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இருந்தாலும் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஆனால் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததாலேயே அது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தொடரில் 14 போட்டியில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றதில் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த தொடரில் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்தது எங்களுக்கு பெரிய பின்னடைவை தந்தது.

அந்த வகையில் கான்வே, பதிரனா, தீபக் சஹார் ஆகிய மூன்று வீரர்களை நாங்கள் காயம் காரணமாக இழந்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்ததில் மகிழ்ச்சி. எங்களது அணியின் நிர்வாகிகளும் எங்களை சிறப்பாக கவனித்துக் கொண்டனர். தனிப்பட்ட சாதனைகள் எனக்கு எப்பொழுதுமே முக்கியம் கிடையாது. தனிப்பட்ட முறையில் இந்த தொடரில் 500 - 600 ரன்களை அடிப்பதை விட வெற்றிதான் இறுதியில் முக்கியம். அந்த வகையில் இந்த தோல்வி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com