அடிலெய்டு டெஸ்ட்; விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா... 2ம் நாள் முடிவில் 128/5


அடிலெய்டு டெஸ்ட்; விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா... 2ம் நாள் முடிவில் 128/5
x

Image Courtesy: AFP

இந்தியா தரப்பில் பண்ட் 28 ரன்னுடனும், நிதிஷ்குமார் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராகுல் 7 ரன், ஜெய்ஸ்வால் 24 ரன், அடுத்து வந்த கில் 28 ரன், விராட் கோலி 11 ரன், ரோகித் சர்மா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி 105 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பண்ட் 28 ரன்னுடனும், நிதிஷ்குமார் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி இன்னும் 29 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

1 More update

Next Story