பந்து தாக்கி தலையில் காயம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் ஆடமாட்டார்

பயிற்சியின் போது பந்து தாக்கி காயமடைந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்து தாக்கி தலையில் காயம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் ஆடமாட்டார்
Published on

நாட்டிங்காம்,

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இது 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் என்பதால் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் காயமடைந்துள்ளார். நேற்று பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பவுன்சராக வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக பதம் பார்த்தது. பந்து தாக்கிய வேகத்தில் தலைக்குள் அதிர்வு இருப்பதாக உணர்ந்ததால், அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் தாக்கம் இருப்பதால் முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் ஆடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நேற்று அளித்த பேட்டியில், மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரராக யார் ஆடுவார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புஜாரா வழக்கம் போல் 3-வது வரிசையிலேயே விளையாடுவார். தொடக்க ஜோடி யார் என்பதை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தினர் இணைந்து முடிவு செய்வார்கள். சிறிய காயப்பிரச்சினையால் பயிற்சி ஆட்டத்தில் நான் விளையாடவில்லை. இப்போது முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன். முதலாவது டெஸ்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நன்கு பயிற்சி செய்து சிறப்பாக தயாராகி இருக்கிறேன் என்றார்.

ஏற்கனவே காயத்தால் சுப்மான் கில் தாயகம் திரும்பிய நிலையில் மயங்க் அகர்வாலும் இப்போது காயமடைந்திருப்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனேகமாக லோகேஷ் ராகுலுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com