பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி தொடரை கைப்பற்றியது

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி தொடரை கைப்பற்றியது
Published on

ஹாமில்டன்,

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 56 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் மிடில் வரிசையில் களம் கண்ட முகமது ஹபீஸ், தனிநபராக நிலைத்து நின்று விளையாடி அணியை தூக்கி நிறுத்தினார். சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவிய ஹபீஸ் கடைசி 3 பந்துகளில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த 40 வயதான முகமது ஹபீஸ் 99 ரன்களுடன் (57 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். அணியின் மொத்த ரன் குவிப்பில் அவரது பங்களிப்பு மட்டும் 60.7 சதவீதம் ஆகும். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 22 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 21 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும், கேப்டன் கேன் வில்லியம்சனும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்ட போது, வில்லியம்சன் பவுண்டரியுடன் முடித்து வைத்தார்.

நியூசிலாந்து அணி 19.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. செய்பெர்ட் 84 ரன்களுடனும் (63 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), வில்லியம்சன் 57 ரன்களுடனும் (42 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com