இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
Published on

ஆன்டிகுவா,

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா 96 ரன்னும், தினேஷ் சண்டிமால் 71 ரன்னும் சேர்த்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜாசன் முகமது 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இவின் லீவிஸ், ஷாய் ஹோப் ஆகியோர் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து வெற்றியை எளிதாக்கினர். ஸ்கோர் 192 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. 4-வது சதம் அடித்த இவின் லீவிஸ் 121 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 103 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் ஷாய் ஹோப் (84 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனை அடுத்து வந்த டேரன் பிராவோ 10 ரன்னிலும், கேப்டன் பொல்லார்ட் 15 ரன்னிலும், பாபியன் ஆலென் 15 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 49.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் 35 ரன்னுடனும், ஜாசன் ஹோல்டர் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் நுவான் பிரதீப், திசரா பெரேரா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். சதம் அடித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் இவின் லீவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com