அரைசதம் அடித்த ஆகாஷ் தீப்.. பகைமை மறந்து பென் டக்கெட் செய்த செயல்.. ரசிகர்கள் பாராட்டு

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டில் இந்த சம்பவம் நடந்தது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன.
பின்னர் 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், 'நைட் வாட்ச் மேனாக' இறங்கிய ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ் தீப் 66 ரன்களும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்துள்ளது. ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் நைட் வாட்ச் மேனாக' களமிறக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்து அசத்தினார். அவரை இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தோளில் கை போட்டு பாராட்டினார். இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஏனெனில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் பென் டக்கெட் (43 ரன், 38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகாஷ் தீப் வீசிய பந்தில் 'ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்' அடிக்க முயற்சித்தபோது துருவ் ஜூரெலிடம் சிக்கினார். அவுட் ஆனதும் டக்கெட்டின் தோள்மீது கைபோட்டு பேசியபடி வித்தியாசமாக ஆகாஷ் தீப் வழியனுப்பி வைத்தார். இது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பென் டக்கெட், ஆகாஷ் தீப்பை நோக்கி, 'உங்களால் என்னை இங்கே அவுட்டாக்க முடியாது' என்று கூறி ஸ்லெட்ஜிங் செய்தார். இதன் காரணமாகவே ஆகாஷ் தீப், டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றியதும் ஆக்ரோஷமாக கத்தியதுடன், இப்படி வழியனுப்பியும் வைத்தார்.
இந்த சூழலில் ஆகாஷ் தீப் அரைசதம் அடித்ததும் பகைமை மறந்து பென் டக்கெட் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.






