அபிஷேக் சர்மாவுக்கு பதில் அபிஷேக் பச்சன் என சொன்ன அக்தர்.. கிண்டலடித்த அபிஷேக் பச்சன்

நடப்பு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லாகூர்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னதாக நடப்பு தொடரில் இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இறுதிப்போட்டியில் இந்தியாவை எப்படியாவது தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் பாகிஸ்தான் ஆயத்தமாகி வருகிறது.
இதனிடையே ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டின் முன்னாள் வீரரான சோயப் அக்தர் சில ஆலோசனைகளை வழங்கினார். அதில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால் பாகிஸ்தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
இதில் அவர் முதலில் அபிஷேக் சர்மாவின் பெயருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனின் பெயரை கூறினார். தொடர்ந்து அவர் அபிஷேக் பச்சன் பெயரை பயன்படுத்தினார். இதனை கேட்டு உடனிருந்த அனைவரும் சிரித்தனர். அது அபிஷேக் பச்சன் கிடையாது அபிஷேக் சர்மா என்று கூறி சோயிப் அக்தரை திருத்தினர். இது இணையத்தில் வைரலானது.
இதனை கவனித்த அபிஷேக் பச்சன் தனது எக்ஸ் பக்கத்தில் அக்தரை கிண்டலடிக்கும் விதமாக, “ஐயா, உங்கள் மீதுள்ள மரியாதைக்காக இதை சொல்கிறேன். என்னுடைய விக்கெட்டையும் அவர்கள் (பாகிஸ்தான் அணி) வீழ்த்துவார்களா என்பது சந்தேகமே .நான் பெரிய கிரிக்கெட் வீரர் கிடையாது. எனக்கு கிரிக்கெட் சுத்தமாக வராது” என்று பதிவிட்டுள்ளார்.






