ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அவர் பந்துவீசுவதை பார்க்க அற்புதமாக உள்ளது - கே.எல்.ராகுல்

மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Image Courtesy: Twitter  
Image Courtesy: Twitter  
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் டிகாக் 81 ரன், பூரன் 40 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி லக்னோவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக லோம்ரோர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மயங்க் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து மயங்க் யாதவ் பந்துவீசுவதை பார்க்க அற்புதமாக உள்ளது என லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் லக்னோ கேப்டன் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம். இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம் இருந்தது. இருந்தாலும் டி காக் மிகச் சிறப்பான தொடக்கத்தை தந்தார்.

அதன் பின்னர் பெங்களூரு வீரர்கள் மீண்டும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்திற்குள் வந்தாலும் இறுதியில் பூரன் மிகச் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்று தந்தார். அதே போன்று பந்துவீச்சிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருக்கிறது. உண்மையிலேயே அவரது வேகத்தில் கீப்பிங் செய்வது சற்று கடினமாகவே உள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டே அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டியது. ஆனால் காயம் காரணமாக அதை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் மிக சிறப்பாக தயாராகி வந்துள்ளார். அவரது பந்துவீச்சும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com