ஆண்டர்சன் - தெண்டுல்கர் டிராபி: 2 வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் விருது... காரணம் என்ன தெரியுமா..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 2 வீரர்களுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர் இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 2 வீரர்களுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்படி இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணியில் இருந்து ஹாரி புரூக்கும் தொடர் நாயகன் விருதினை பெற்றனர்.
அதற்கான காரணம் என்னவெனில், இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் நீண்ட கால பாரம்பரியமாக தொடர் நாயகன் விருது இரு அணிகளின் வீரருக்கும் வழங்கப்படுகிறது. தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள் எதிரணி பயிற்சியாளரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்படி இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தொடர் நாயகனாக சுப்மன் கில்லை தேர்வு செய்தார். மறுபுறம் இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஹாரி புரூக்கை தேர்வு செய்தார். எனவேதான் சுப்மன் கில் மற்றும் ஹாரி புரூக் இருவருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.






