ஏலத்தில் கோப்பையை வெல்லும் அளவிற்கு திறமையான வீரர்களை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கவில்லை - அனில் கும்ப்ளே

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் துபாயில் நேற்று நடந்தது.
ஏலத்தில் கோப்பையை வெல்லும் அளவிற்கு திறமையான வீரர்களை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கவில்லை - அனில் கும்ப்ளே
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் நேற்று நடந்தது.

இதில் பெங்களூரு அணி நிர்வாகம் அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், டாம் கரண் ஆகிய 3 வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத இந்திய பவுலரான யாஷ் தயாளை வாங்கிய அந்த அணி மேற்கொண்டு 2 உள்ளூர் இந்திய வீரர்களை அடிப்படை விலைக்கு வாங்கியது.

இந்நிலையில் ஏலத்தில் கோப்பையை வெல்லும் அளவிற்கு திறமையான வீரர்களை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கவில்லை என்று அனில் கும்ப்ளே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஏலத்தில் கோப்பையை வெல்லும் அளவிற்கு திறமையான வீரர்களை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கவில்லை. பெங்களூரு அணி வாங்கிய வீரர்களை விட விடுவித்த வீரர்கள் தரமானவர்களாக இருந்தனர். அவர்கள் விடுவித்த ஹசரங்கா, ஹேசல்வுட், ஹர்ஷல் படேல் ஆகியோரை விட இந்த ஏலத்தில் சிறந்த பவுலர்களை வாங்கினார்களா? என்பது என் கேள்வியாகும். அதை விட இப்போதும் அவர்களிடம் தரமான ஸ்பின்னர் இல்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அப்படிப்பட்ட ஸ்பின்னர் அவர்களிடம் இல்லை.

இப்போது அணியில் உள்ள கரண் சர்மா கடந்த சீசனில் பெரிய அளவில் விளையாடவில்லை. கடந்த வருடம் இம்பேக்ட் வீரராக விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை. இதற்கிடையே அவர்கள் சில வீரர்களை டிரேடிங் முறையில் கழற்றி விட்டனர். எனவே ஸ்பின்னர் இல்லாமல் அவர்களால் சாதிக்க முடியாது. அவர்கள் இந்த ஏலத்தில் சரியான முடிவை எடுத்தார்கள் என்று நான் கருதவில்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com