மிதாலிராஜ் சாதனையில் மற்றொரு மைல்கல்; ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எட்டினார்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்து உள்ளார்.
மிதாலிராஜ் சாதனையில் மற்றொரு மைல்கல்; ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எட்டினார்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த 3வது ஒரு நாள் போட்டியின் 27.5வது ஓவரில் போஸ்க் வீசிய பந்தில் பவுண்டரி அடித்தபொழுது, சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை என்ற பெருமையை மிதாலிராஜ் பெற்றார்.

இந்த சாதனை பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். மிதாலிராஜ் இதுவரை 291 இன்னிங்சில் விளையாடி 10,001 ரன்கள் (ஒரு நாள் போட்டியில் 6,974 ரன், டெஸ்டில் 663 ரன், 20 ஓவர் போட்டியில் 2,364 ரன்) குவித்துள்ளார். இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்களுடன் (316 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார்.

இந்நிலையில், மிதாலிராஜ் தனது சாதனையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். அவர், இன்று நடந்த ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து, முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்து உள்ளார். அவர் தனது 213வது போட்டியில் இந்த பெருமையை எட்டியுள்ளார்.

அவர் இதுவரை 7 சதம் மற்றும் 57 அரை சதம் அடித்து உள்ளார். இதற்கு முன், மகளிர் ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்து மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை வரிசையில் இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் உள்ளார். இவர் கடந்த 1997ம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்கேற்று கடந்த 2016ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 191 போட்டிகளில் கலந்து கொண்டு 5,992 ரன்களை சேர்த்து உள்ளார்.

நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4,548 ரன்கள் எடுத்து சாதனை பட்டியலை நெருங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com