ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகல்

காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகல்
Published on

லீட்ஸ்,

லண்டனில் நடந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆஷஸ் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு பந்து எகிறிச் சென்று அவரது கழுத்தை பயங்கரமாக பதம் பார்த்ததில் ஸ்டீவன் சுமித் நிலைகுலைந்து கீழே சரிந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு தைரியமாக மீண்டும் களம் இறங்கி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து கழுத்து பகுதியில் மேற்கொண்டு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை துல்லியமாக அறிய ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்னஸ் லபுஸ்சேன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார். அபாரமான ஃபார்மில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித், காயம் காரணமாக விலகியிருப்பது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த (142,144 ரன்கள்) ஸ்டீவன் ஸிமித், 2-வது டெஸ்டில் 92 ரன்கள் குவித்து இருந்தார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 2-வது இடத்தை எட்டிய ஸ்டீவன் ஸ்மித், முதலிடத்தில் உள்ள விராட் கோலியை விட வெறும் 9 ரன்களே பின் தங்கியுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com