ஆஷஸ் 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு

தொடர்ந்து 435 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
ஆஷஸ் 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி  முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஸ்டார்க் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலி 9 ரன்களிலும், அடுத்து வந்த போப் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த பென் டக்கெட் 29 ரன்களிலும், ஜோ ரூட் 19 ரன்களிலும் அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

இந்த இக்கட்டான சூழலில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - ஹாரி புரூக் ஜோடி சேர்ந்து அணியை காப்பாற்ற போராடினர். 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. புரூக் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 22 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 6 ரன்களிலும், பிரைடன் கார்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பின்வரிசையில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கை கோர்த்து அணிக்கு வலு சேர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணி 200 ரன்களை கடக்க உதவியது.

இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் அடித்தது. ஸ்டோக்ஸ் 45 ரன்களுடனும், ஆர்ச்சர் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டோக்ஸ் அரைசதமடித்தார்.சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் 83 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்து விளையாடி ஆர்ச்சர் அரைசதமடித்தார். அவர் 51 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 85 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் , போலந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. இ

ஆஸ்திரேலியா சார்பில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். மேலும் அலெக்ஸ் கேரி அரைசதமடித்தார். ஹெட் 142 ரன்கள், கேரி 52 ரன்கள் எடுத்து இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

ஹெட் , கேரி இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தனர். கேரி 72 ரன்களில் வெளியேறினார். ஹெட் 172 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 349 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 435 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com