ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸி. முன்னணி வீரர் விலகல்

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி அடிலெய்டில் வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.தொடை தசைநார் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவர் விலகியுள்ளார்.
ஏற்கனவே இந்த காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் ஆடாத இவர், 3-வது போட்டிக்குள் முழு உடற்தகுதியை எட்டி விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.






