அஸ்வினுக்கு ஐ.பி.எல். கோப்பையை கேப்டனாக வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது - தமிழக வீரர் பேட்டி

இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
image courtesy: instagram/ indrajithbaba
image courtesy: instagram/ indrajithbaba
Published on

சென்னை,

சமீபத்தில் முடிவடைந்த 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அந்த வெற்றிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக எலிமினேட்டர் போட்டியில் அரை சதமடித்த அவர் தகுதி சுற்று 2-விலும் அரை சதமடித்து தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். அத்துடன் சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் அரை சதமடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று திண்டுக்கல்லை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் ஐ.பி.எல். கோப்பையை கேப்டனாக வெல்ல வேண்டும் என்பது ரவிச்சந்திரன் அஸ்வினின் கனவாக இருப்பதாக திண்டுக்கல் அணியில் சக வீரரான பாபா இந்திரஜித் தெரிவித்துள்ளார். அத்துடன் திண்டுக்கல் அணியில் பயிற்சியாளர் இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு அஸ்வின் தம்முடைய அனுபவத்தை பயன்படுத்தி அனைத்து வீரர்களையும் வழி நடத்தியதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "கிரிக்கெட்டைப் பற்றிய சிறந்த மூளையை கொண்டுள்ள அவரை நாங்கள் அனைவருமே கேப்டனாக பார்த்தோம். அவர் எப்போதும் பேட்ஸ்மேன் அல்லது பவுலருக்கு மேலே இருப்பதை பற்றி சிந்திப்பார். அவரிடம் கேப்டனுக்கு தேவையான அனைத்து தலைமைப் பண்புகளும் உள்ளன. ஐ.பி.எல். கோப்பையையும் கேப்டனாக வெல்ல வேண்டும் என்ற கனவு அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவர் தன்னுடைய திறன் மட்டுமல்லாமல் மற்ற வீரர்களின் திறனை வளர்ப்பதற்கும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த 30 - 35 நாட்களாக அவர் எங்கள் அணியுடன் இணைந்து விளையாடினார். அணியின் முதல் வீரர் முதல் கடைசி வீரர் வரை அனைவரும் பிட்டாக முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து எங்களை தள்ளினார். அவரைப் போல் ஒரு தலைமை பயிற்சியாளர் கூட செய்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com