பிக்பாஷ் கிரிக்கெட்டில் பங்கேற்கும் அஸ்வின்..?

கோப்புப்படம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். கடந்த மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் லீக் (பி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு இழுக்க 4 அணிகள் முயற்சித்து வருகின்றன. சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணி நிர்வாகங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த வார இறுதிக்குள் ஏதாவது ஒரு அணியுடன் அவர் ஒப்பந்தம் செய்து கொள்வார் என்று தெரிகிறது.
பிக்பாஷ் கிரிக்கெட்டில் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடிய எந்த இந்திய வீரரும் பங்கேற்றதில்லை. அந்த குறையை அஸ்வின் போக்க போகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகே இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக்கில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது.
அந்த வகையில் இதுவரை தினேஷ் கார்த்திக் தென்ஆப்பிரிக்கா லீக்கிலும், அம்பத்தி ராயுடு வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சி.பி.எல். போட்டியிலும், ராபின் உத்தப்பா, யூசுப் பதான் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐ.எல்.டி. 20 ஓவர் போட்டியிலும், சுரேஷ் ரெய்னா டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அபுதாபி 10 ஓவர் போட்டியிலும் ஆடியுள்ளனர். இந்த வரிசையில் அஸ்வினும் இணைகிறார்.






