எதிர்காலத்தில் நிச்சயம் அஸ்வினால் அந்த பதவிகளை அடைய முடியும் - பாக். முன்னாள் வீரர் வாழ்த்து

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

லாகூர்,

கடந்த 14 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கோலாச்சி வந்த சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) இடம்பெற்றிருந்த இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உலகெங்கிலும் இருந்து குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லதீப்பும் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான மரியாதை கிடைக்காமல் போயிருப்பதாலும் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்கு முழுவதுமாக தெரியாது. அதேபோன்று வாஷிங்டன் சுந்தர் வருகையும் அவரது கெரியரின் முடிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

இருந்தாலும் ஓய்வு என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை நாம் மதித்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு ஜாம்பவான்கள் இருக்கின்றனர். ஆனால் அஸ்வின் போன்று கிரிக்கெட் குறித்த அறிவுடையவர்கள் சிலரே இருக்கின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் குறித்த தெளிவான அறிவு அஸ்வினிடம் வேற லெவலில் இருக்கிறது. எனவே நிச்சயம் அவர் எதிர்காலத்தில் பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகிய நிர்வாக பதவிகளை கூட அடைய முடியும். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com