ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னதாக காயத்தில் சிக்கிய 2 இந்திய முன்னணி வீரர்கள்

image courtesy:PTI
இலங்கைக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தின்போது இருவரும் காயத்தில் சிக்கியுள்ளனர்.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின்போது இந்திய முன்னணி வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயத்தில் சிக்கியுள்ளனர். இருவரும் தசைவலியால் சிரமப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது பீல்டிங் செய்கையில் பாதியில் வெளியேறினர்.
இதில் இன்னிங்சின் முதல் ஓவரில் ஒரு ஓவரை மட்டுமே வீசிய பிறகு பாண்ட்யா மைதானத்தை விட்டு வெளியேறினார். அதே நேரத்தில் அபிஷேக் 9.2 ஓவர்கள் பீல்டிங் செய்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இருவரும் விளையாடுவது மிகவும் அவசியம். எனவே இருவரும் அதற்குள் முழு உடற்தகுதியை எட்டி விட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அபிஷேக் சர்மா நலமுடன் இருப்பதாக பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ஆனால் ஹர்திக் பாண்ட்யாவின் நிலை குறித்து இன்று முடிவெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.






