ஆசிய கோப்பை: பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார்.. ஏனெனில்.. - டி வில்லியர்ஸ்

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
கேப்டவுன்,
அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆன ஜஸ்பிரித் பும்ராவும் இடம்பெற்றுள்ளார்.
இருப்பினும் அவர் ஆசிய கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், பணிச்சுமை காரணமாக 2 போட்டிகளில் இருந்து ஒதுங்கி கொண்டார். இதனால் இந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் எபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ டி20 அணியில் அவரை (பும்ரா) மீண்டும். பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முழு உடற்தகுதியுடன் அவர் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். இருப்பினும் அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணி நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் அவரை பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக நிச்சயம் அவர் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டியின்போது மட்டுமே களமிறங்குவார் என்று தெரிகிறது. இது தேர்வாளர்களின் முன்நோக்கிய அணுகுமுறையை காண்பிக்கிறது. மூத்த மற்றும் மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் வீரர்களை இப்படித்தான் நிர்வகிக்க வேண்டும். 30 வயதிற்கு மேலான ஒரு வீரர் தொடர்ச்சியாக விளையாடுவது அவருக்கு பணிச்சுமையையும், காயத்தையும் ஏற்படுத்தலாம். சில தேர்வாளர்கள் இதைப் புரிந்துகொள்கிறார்கள், சிலர் புரிந்துகொள்ளவில்லை” என்று கூறினார்.






