ஆசியகோப்பை கிரிக்கெட்: 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி

இன்றைய ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
Image Courtesy : @BCBtigers twitter
Image Courtesy : @BCBtigers twitter
Published on

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில் இந்த ஆட்டத்த்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் வங்காளதேச அணி தடுமாறியது. அந்த அணியின் லிட்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , தன்சித் ஹசன் 13 ரன்களிலும், அனாமுல் ஹக் 4 ரன்களிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன், டவ்ஹித் ஹ்ரிடோய் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த இருவரும் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் , டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் சிறப்பாக ஆடி நசும் அகமது 44 ரன்களும் , மகேதி ஹசன் 29ரன்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் , முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.

இறுதியாக வங்காளதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்தது. இதையடுத்து 266 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பந்துகளில் ரன் ஏதுமின்றி அவுட்டானார்.

அடுத்து வந்த திலக் வர்மா(5 ரன்கள்), கே.எல்.ராகுல்(19 ரன்கள்), இஷான் கிஷன்(5 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி அசத்தினார்.

சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் போல்ட் ஆனார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய அக்சர் பட்டேல் 42 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 133 பந்துகளில் 121 குவித்து கேட்ச் ஆனார். இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 259 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com