ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய வீரர்கள்

ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்ய பி.சி. சி.ஐ. திட்டமிட்டு இருந்தது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை ஸ்பான்சராக டிரீம்11 இருந்து வந்தது. செல்போன் செயலி மூலம் விளையாடப்பட்ட இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் குறிப்பிட்ட கிரிக்கெட் ஆட்டம் நடக்கும்போது, இரு அணிகளையும் சேர்த்து சிறப்பாக செயல்படும் 11 வீரர்களை அடையாளம் கண்டு, அதில் அதிக புள்ளிகளுக்குரியவர்களை கேப்டன், துணை கேப்டனாக சரியாக தேர்வு செய்து இருந்தால் கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும். ஆனால் பந்தயத்தில் சேருவதற்கு ரூ.49, ரூ.39 இப்படி பல்வேறு பிரிவில் பணம் கட்ட வேண்டும். இதன் மூலம் டிரீம்11-க்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது.
2023 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப்பாக வழங்க டிரீம்11 இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்கிடையே, பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்ட மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்த ‘டிரீம் 11’ அந்தப் பொறுப்பில் இருந்து விலகியது.
டிரீம்11 மற்றும் மற்றொரு ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கம்பெனியான மை11 சர்க்கிள் ஆகியவை இந்திய அணிகளுக்கும் (ஆண்கள், பெண்கள், ஜூனியர்), ஐ.பி.எல். போட்டிக்கும் ஸ்பான்சர் அளித்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரிய வருவாயில் அவற்றின் பங்களிப்பு சுமார் ரூ.1,000 கோடியாக இருந்தது. இந்த வருமானத்தை கிரிக்கெட் வாரியம் இழக்கிறது.
‘டிரீம் 11’ நிறுவனம் முன்னதாகவே விலகியதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) புதிய ஸ்பான்சரை தேடி வருகிறது. ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்ய பி.சி. சி.ஐ. திட்டமிட்டு இருந்தது. ஆனால் குறுகிய கால இடைவெளி இருந்ததால், புதிய ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. இதனால், ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து இந்த தொடரில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இதில் இந்திய அணியின் ஜெர்சியில் எந்த ஸ்பான்சர் பெயரும் இடம்பெறவில்லை.






