ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி


ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
x

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.

அபுதாபி,

8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த ‘பி’ பிரிவின் கடைசி லீக்கில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்த ஆப்கானிஸ்தான் அணி கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் (12.1 ஓவர்) தடுமாறியது.

இதன் பின்னர் முகமது நபியும், கேப்டன் ரஷித்கானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஷித்கான் தனது பங்குக்கு 24 ரன்கள் எடுத்தார். முகமது நபி, கடைசி ஓவரில் அட்டகாசப்படுத்தினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகேவின் இறுதி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்டார். இதில் ஒரு நோ-பாலும் அடங்கும்.

கடைசி பந்தையும் சிக்சராக்கி அவர் சாதனை படைப்பாரா? என்ற ஆவல் தொற்றிக் கொண்ட நிலையில், அந்த பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்ட முடியவில்லை. இதில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது முகமது நபி (60 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்-அவுட் ஆகிப் போனார்.

அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 32 ரன்கள் வந்தது. முன்னதாக முகமது நபி 20 பந்துகளில் அரைசதத்தை எட்டி, ஆப்கானிஸ்தான் வீரரின் அதிவேக அரைசத சாதனையை சமன் செய்தார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா 4 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. குசல் மென்டிஸ் (74 ரன், 52 பந்து, 10 பவுண்டரி), குசல் பெரேரா (28 ரன்), கமிந்து மென்டிஸ் (26 ரன்) வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். ‘பி’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டின. ஆப்கானிஸ்தான் (2 புள்ளி) வெளியேறியது.

1 More update

Next Story