ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது நியாயமா..? - தினேஷ் கார்த்திக் கேள்வி

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படிஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இவர்களுடன் ரிசர்வ் வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதான அணியில் யாராவது காயமடைந்து விலக நேரிட்டால் அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும்.

சமீப காலமாக ஐ.பி.எல். மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பாத்த நிலையில் அவர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம்பெறாதது பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது நியாயமா..? என தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஸ்ரேயாஸ் ஐயர் எங்கே? இதுதான் பெரிய கேள்வி, இல்லையா? அவர் எப்படி அணியில் இருந்து விலக முடியும்? இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருப்பதால், அவரை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்காமல் விட்டது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், எதிர்காலத்தை மனதில் கொண்டு, அடுத்த டி20 உலக கோப்பைக்கான ஐந்து வீரர்களின் பட்டியலில் கூட அவரைச் சேர்க்காதது ஏன்?. அவருக்கான கதவுகள் மூடப்பட்டு விட்டதா? இது சற்று அநியாயம். ஒரு கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், மேலும் அழுத்தத்தின் கீழ் ஒரு பேட்டராக மிகச் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். அவர் அணியில் இருந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com