ஆசிய கோப்பை: வங்காளதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங்காங் அணி


ஆசிய கோப்பை: வங்காளதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங்காங் அணி
x
தினத்தந்தி 11 Sept 2025 9:59 PM IST (Updated: 11 Sept 2025 10:01 PM IST)
t-max-icont-min-icon

20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - ஹாங்காங் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியில் ஷீஷான் அலி, நிஷாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்கள் முறையே 30 ரன்கள், 42 ரன்கள் மற்றும் 28 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி பேட்டிங் செய்து வருகிறது.

1 More update

Next Story