ஆசிய கோப்பை: பும்ரா இல்லை.. அந்த இந்திய பவுலர்தான் அசத்துவார் - ரவி சாஸ்திரி

ஆசிய கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை சந்திக்கிறது.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (10-ந்தேதி) ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதல் 14-ந்தேதி அரங்கேறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகிய திறமையான வீரர்களால் வலுவானதாக உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “குல்தீப் இப்போது சிறப்பான பார்மில் இருப்பதாக நினைக்கிறேன். அவர் ஐ.பி.எல்.-ல் மிகச்சிறப்பாக செயல்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் அணியில் இடம் பெற முடியவில்லை. ஆனால் அவர் ஆசிய கோப்பையில் அசத்துவார் என்று நினைக்கிறேன். வருண் மற்றும் அக்சர் படேலுடன் இணைந்து அணி முன்னேறுவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்” என்று கூறினார்.






