ஆசிய கோப்பை: அவர்கள் இருவரில் சாம்சனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை: அவர்கள் இருவரில் சாம்சனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வரும் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆன அபிஷேக் சர்மாவுக்கு இடம் உறுதி. மற்றொரு தொடக்க ஆட்டக்காராக துணை கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் சுப்மன் கில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். இதனால் டி20 அணிக்கு அவர் திரும்பியுள்ளார். அதோடு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும், ஜிதேஷ் சர்மாவும் உள்ளனர். இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும்.

சுப்மன் கில் அணிக்குத் திரும்பியிருப்பதால், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த சஞ்சு சாம்சனின் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப்மன் கில், அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி நிலவுகிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் ஜிதேஷ் சர்மா - சஞ்சு சாம்சன் இருவரில் சாம்சனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சுப்மன் கில் டி20 போட்டியில் வெற்றிகரமான பேட்ஸ்மேன் ஆவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐ.பி.எல்.-ல் குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அவர் ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற்றவர். சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பது அணியின் தேர்வு குழுவிற்கு ஒரு நல்ல தலைவலியாகும். இரண்டு திறமையான பேட்ஸ்மேன்கள் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும்

சஞ்சு சாம்சன் 3-வது வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர், தேவைப்பட்டால் 6- வது இடத்தில் வெற்றிகரமாக முடிக்க கூடியவராகவும் களமிறங்குபவர் . ஜிதேஷ் சர்மாவும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனாலும் தொடக்க ஆட்டங்களில் சஞ்சு சாம்சனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எனது கணிப்புப்படி முதல் 2 போட்டிகளிலாவது ஜிதேஷ் சர்மாவை விட சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகு தொடரில் அவரது ஆட்டத்தைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கருதுகிறேன்” என கூறினார்.

1 More update

Next Story