ஆசிய கோப்பை: ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டது ஏன்..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 2-வது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2-வது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜிதேஷ் ஏறக்குறைய ஒராண்டுக்குப்பின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஜிதேஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பினிஷர் ரோலில் கச்சிதமாக செயல்பட்ட அவர் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார். இதன் காரணமாக மீண்டும் அவருக்கு இந்திய அணியில் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
இருப்பினும் பேக்கப் விக்கெட் கீப்பராக இளம் வீரர் துருவ் ஜூரெல் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் ஜிதேஷ் சர்மா இடம்பெற்றிருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கடந்த டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு, ஜிதேஷ் சர்மாவுடன் நாங்கள் நிறையப் பேசினோம். குறிப்பாக தனிப்பட்ட மைல்கற்களைப் பற்றி யோசிக்காமல், உங்கள் பயணத்தைப் பின்தொடருங்கள் என்று பேசினோம். அவருடைய அதிரடியான ஆட்டத்தை நீங்கள் இதேபோன்று தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தோம். ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இதன் மூலம் மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளார்” என்று கூறினார்.






