கடைசி 20 ஓவர் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
கடைசி 20 ஓவர் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் தற்காலிக ஓய்வில் சென்றுள்ள மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக பென் மெக்டெர்மோட் சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா 57 ரன்கள் (45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் (8.5 ஓவர்) திரட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். வார்னர் 12 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். பிஞ்ச் 37 ரன்களில் (25 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் 13 ரன்னிலும், மெக்டெர்மோட் 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலியா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 57 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆஷ்டன் டர்னர் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. இந்த தொடரில் ஒரு ஆட்டத்திலும் அவுட் ஆகாத வார்னர் (100, 60, 57 ரன்) ஆட்டநாயகன், தொடர்நாயகன் என்று இரட்டை விருதுகளை தட்டிச் சென்றார். மேலும் வார்னர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த (73 ஆட்டத்தில் 2,009 ரன்) முதல் ஆஸ்திரேலிய வீரர், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

அடுத்து பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com