

கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் குரூப் பி பிரிவில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இடம்பெற்றிருந்தது. ஆஸ்திரேலியா கடந்த 11ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இதை தொடர்ந்து 13ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. மேலும், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.
3 ஆட்டங்களில் 2ல் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா குரூப் பி பிரிவில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. அதேவேளை, குரூப் பி பிரிவில் இன்று ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால், மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம் 3 போட்டிகளில் ஆடிய ஜிம்பாப்வே 2ல் வெற்றி, 1ல் முடிவு தெரியவில்லை என்ற நிலையில் 5 புள்ளிகள் பெற்றது. இதையடுத்து, 5 புள்ளிகள் பெற்ற ஜிம்பாப்வே குரூப் பி பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதன் காரணமாக லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் 1ல் வெற்றி, 2ல் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா குரூப் பி பிரிவில் புள்ளிப்பட்டியலில் 4வது இடம்பிடித்தது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. குரூப் பி பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.