ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர்கள்தான் சிறந்த அணி - மைக்கேல் வாகன்

image courtesy: PTI
ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன் இலக்கை இந்திய அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக 76 ரன்கள் (83 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா (263 ரன், 3 விக்கெட்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா வென்ற 7-வது கோப்பை இதுவாகும். 1983, 2011-ம் ஆண்டுகளில் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையையும், 2007, 2024-ம் ஆண்டுகளில் 20 ஓவர் உலகக் கோப்பையும் தன்வசப்படுத்தி இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்திய அணி மகுடம் சூடியது.
இந்நிலையில் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்) இந்தியா சிறந்த அணி என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். எனவே விமர்சிக்காமல் எதிரணிகளால் முடிந்தால் இந்தியாவை துரத்தி வெற்றிகளை பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் மற்ற அணிகளைக் காட்டிலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த அணியாக இந்தியா திகழ்கிறது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் டி20 உலகக்கோப்பையை, சாம்பியன்ஸ் டிராபியை வைத்திருக்கிறார்கள். தற்போது மற்றவர்கள் அவர்களை பிடிக்க முயற்சிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.






